பல திருமண நிகழ்ச்சிகளில் கல்லூரி படிக்கும் வயதுள்ள இளைஞர்கள் ஓடியாடி உணவு பரிமாறுவார்கள். அப்போதெல்லாம், இவர்கள் கேட்டரிங் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளை ஞர்கள் என்று நினைத்திருப்போம். வீரபாண்டியனின் ‘பருக்கை’ நாவலைப் படித்த பிறகு அந்த எண்ணமே மாறி விட்டது. ஒருவேளை நல்ல உணவுக்குக்கூட வழியில்லாமல் அரசு விடுதியில் தங்கி, பகுதி நேரமாக கேட்டரிங் வேலை பார்க்கும் இளைஞர்களின் வலியைப் பதிவு செய்துள்ள நாவல்தான் ‘பருக்கை’. வீரபாண்டியனின் முதல் நாவல் இது. சென்னை ராயபுரத்தில் உள்ள முதுநிலை மாணவர்கள் அரசு விடுதியை மையப்படுத்தியும், படிப்புக்கு இடையே ஒரு வேளை நல்ல ருசியான உணவுக்காக கேட்டரிங் வேலைக்கு மாணவர்கள் செல்வதையும், அந்த வேலைக்கும் போட்டாபோட்டி ஏற்படுவதையும், உணவு பரிமாறும்போதே உணவைச் சாப்பிட நாக்கில் எச்சில் ஊறுவதையும், கடைசியில் சரிவர உணவு கிடைக்காமல் திண்டாடுவதையும் நாவல் முழுவதும் படரவிட்டிருக்கிறார் ஆசிரியர். இடையிடையே சமூல அவலங்களை நூலில் குறிப்பிட்டுள்ளது வாசிப்புக்கு வலுச் சேர்க்கிறது. லட்சியங்களைச் சுமந்துகொண்டு சென்னைக்கு வரும் கிராமப்புற ஏழை மாணவர்கள், கைச் செலவுக்குப் பெற்றோரை எதிர்பார்க் காமல், கேட்டரிங் வேலை செய்து தங்கள் கனவை நிறைவேற்றிக்கொள்ள முயல்கிறார்கள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார். கிராமப்புறங்களில் இருந்து நகரங் களுக்குப் படிக்க வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நூல் தெளிவாகப் பேசுகிறது. தமிழகத்தில் அரசு விடுதிகள் எப்படிச் செயல்படுகின்றன, அங்குத் தங்கியுள்ள மாணவர்கள் எப்படிக் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என்பதற்கு ஒரு பருக்கை உதாரணம் இந்த நாவல். பருக்கை வீரபாண்டியன். பரிசல் புத்தக நிலையம், எம்.எம்.டி.ஏ. காலனி, சென்னை-106, விலை : ரூ.160
பருக்கை / Parukkai
Book Title பருக்கை (parukkai) Author வீரபாண்டியன் (Veerapandian) ISBN 9788192491202 Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu) Pages 248 Published On Dec 2012 Year 2012 Edition 3 Format Paper Back Category Novel | நாவல், Award Winning Books | விருது பெற்ற நூல்

