top of page

Author :  Ramani Chandran - ரமணிசந்திரன்

 

'இந்தியா ஸ்டோர்' என்ற பெயரே சௌமித்ராவைக் கவர்ந்தது என்றால், அங்கே வேலை தேடிச் சென்றபோது அதன் தோற்றத்தில் அவள் மயங்கியே விட்டாள் எனலாம்.
பெரிய வீடும் தோட்டமுமாக இருந்ததைப் பிற்பாடு மாற்றி, அப்போதைக்கு பெரிய அளவில் நல்ல பொருட்களை விற்கும் கடையாக மாற்றி இருந்தனராம்...
சொல்லப் போனால், அக்கா வீட்டு நினைவில் பெரியதோட்டமும் நிறைய இடமுமாக நகருக்குள் இருந்த அந்த இடத்தின் தோற்றமே சௌமித்ரா அங்கே வேலையில் சேர ஒரு பெரிய காரணமாகவும் ஆயிற்று.
தந்தை வழிச் சொத்தான தங்கள் வீட்டை அப்படி மாற்றி, இந்தியா ஸ்டோர் என்று பெயர் வைத்து, கடையை நடத்தியது, அந்த இடத்தின் உரிமையாளர்களான வயதான இரு பெண்களே.
வயதான என்றால், மூதாட்டிகள் என்று குறிப்பிடக் கூடிய அளவு அதிக வயதே. அவள் வேலையில் சேரும்போது, சகோதரிகள் இருவருமே எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தார்கள்.
அந்த வயதின் காரணமாக, அவர்களுக்கு எவ்வளவோ பாதிப்புகள் இருக்கக்கூடும். ஆனால் எதையும் வெளிக்காட்டி முக்கி முனகாமல், இயன்றவரை நிமிர்வோடு அவர்கள் நடந்து கொண்ட விதமும் சௌமியின் மனதை மிகவும் கவர்ந்தது...
எண்பதுகளில் உள்ள அந்த இரு சகோதரிகளின் உடை கூடக் கொஞ்சம் அந்த நாள் போலத்தான். பெரிய பன் கொண்டை, கைவேலை செய்த சேலைகள், இழுத்து ப்ருச் குத்தி மடிப்புக் கலையாத தோற்றம், மல்லிகை மொக்கு பஃப்கை வைத்த ரவிக்கை.
பார்க்கையில் சௌமித்ராவுக்கே முதலில் பிரமிப்பாகத்தான் இருந்தது.
அங்கே சிறு சிறு மாற்றங்களைக் கொண்டு வர முயற்சித்து, ஒரு பயனும் இல்லாது போகிறவரை,
இனி ஒரு பயனும் இராது என்று நிச்சயமாகிற வரை, அந்த பிரமிப்பு அப்படியே இருந்தது!
வரவு செலவுக் கணக்கு, தொழில் நிர்வாகம் என்று அவள் கற்றுப் பயின்றதற்கும், அங்கே அவள் செய்த வேலைக்கும் பெரிய சம்பந்தம் கிடையாதுதான். ஆனால் கொஞ்ச நஞ்சம் இருந்ததையும் செயல்படுத்த முடியாமல் போனதுதான் அவளுக்கு வருத்தமாக இருந்தது.
ஆனால் அந்த வருத்தமெல்லாம் பிறகு வந்தது தான். அதாவது அவள் எண்ணிய முன்னேற்றங்களை நடைமுறைப்படுத்த முடியாமல் போன பிறகு! முதலில் என்னவோ கண்டதும் காதல் என்பார்களே, அது போல அந்த இடத்தில் வேலையை மறுக்கும் எண்ணமே அவளுக்கு வரவில்லை.
அதுவும், அவளுக்கு முன்பாக அங்கே அதே வேலையைப் பார்த்தவள், சௌமித்ராவுடைய சினேகிதியுடைய அக்காதான். அவள் சொல்லித்தான் இந்த வேலைபற்றி சௌமித்ரா அறிய நேர்ந்ததே.“சம்பளம், விடுமுறை எல்லாம் முதலில் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கையைக் கட்டிக் கொண்டு வேலை செய்கிற மாதிரி எல்லாமே பிறகு வெறுத்துவிடும்”என்று பெரியவள் எச்சரித்த பிறகும் போனாள்.
பெரியவர்களுக்கும் அவளைப் பிடித்துப் போய்விட, மறுநாளே அவள் வேலையிலும் சேர்ந்து விட்டாள். இப்போது அவளுக்கும் அதே மனநிலைதான்.
அந்த சகோதரிகளுக்கு ஒரு தங்கையும் உண்டாம். ஆனால் அவள் காதல் திருமணம் செய்து கொண்டுபோய்விட்டதாகவும், மூத்த இரு பெண்களும் மணம் புரிந்து கொள்ளாமல் தந்தையுடனேயே இருந்து விட்டதாகவும் சௌமித்ரா கேள்விப்பட்டிருந்தாள்.
சற்று இலகுவாகப் பேசத் தொடங்கிய பிறகு, அந்த இருசகோதரிகளுமே கிட்டத்தட்ட அந்த வரலாறையே உறுதிப்படுத்தினர்.
தந்தை ஒரு பணக்காரராக இருந்தார். நகரத்தில் ஒரு பெரிய பழைய புகழ் வாய்ந்த பெரிய இடத்தில்... கிட்டத்தட்டப் பாதித் தெரு நீளத்துக்கான பரந்த இடத்தில் ஒரு பாதியில் வீடும் மீதியில் விசாலமான தோட்டமும் இருந்தன.
உயர்ந்த நிலையில் பல நண்பர்கள். சில வெள்ளையர்களும் அவரது கூட்டத்தில் இருந்தார்கள். நாகரீகம் என்றாலே விருந்தும் கேளிக்கைகளும்தான் என்றிருந்த காலம். அது போன்ற செலவுகளுக்குத் தகப்பனார் தயங்கவே மாட்டார். அரண்மனை போன்ற வீடும் தோட்டமும் அதற்கு வசதியாகவும் இருந்தது.

நான் பேச நினைத்ததெல்லாம் / Naan pesa ninaithathellam

10,00 CHFPreis
Anzahl
  • Book
    •  Naan pesa ninaithathellam
    Author
    • Ramani Chandran
    Binding
    • Paperback
    Publishing Date
    • 2016
    Publisher
    • Arunothaiyam Pathipagam chennai
    Edition
    • FIRST
    Number of Pages
    • 188
    Language
    • Tamil
bottom of page