கார்கடல் (வெண்முரசு நாவல்-20)
மகாபாரதப் போரின் உச்சங்கள் நிகழ்வது இந்நாவலில். அந்த மாபெரும் போர் இருண்டு முகிலென அனைத்து அறங்களையும் நெறிகளையும் மூடுவதன் சித்திரம் இதில் உள்ளது. ஒவ்வொரு கட்டுகளாக அவிழத் தொடங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்கள் இறுதி எல்லைகளை உணர்கிறார்கள். வீரத்திற்கும் துணிவுக்கும் தற்கொடைக்கும் எழவைக்கும் உயரங்களையும் சினத்திற்கும் வஞ்சத்துக்கும் இறங்கவைக்கும் எல்லைகளையும். போர் ஏன் உலக இலக்கியங்களில் அத்தனை விரிவாகச் சொல்லப்படுகிறது? ஏனென்றால் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் நிகழ்ந்துகொண்டிருப்பது போர்தான். நுண்செயல்களாலான போர், அகப்போர், குறியீட்டுப்போர். அத்தனை போர்களையும் அப்பட்டமாகப் புறத்தே நிகழ்த்திப் பார்ப்பதே போர் என நிகழ்கிறது. அங்கே மனிதன் தன்னை முழுவிசையுடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் பிறமானுடருடன், அறியமுடியாத ஊழுடன் உரசிக் கொள்கிறான், அறிந்து மீள்கிறான், அழிகிறான். கார்கடல் முந்தைய நாவல்களில் பேருருவாக எழுந்த போர்க்களக் காட்சிகளை வெவ்வேறு கண்கள் வழியாக விரித்துரைத்து முன்செல்கிறது. மகாபாரதம் என்பதே போரின் கதைதான், அதன் அனைத்து நிகழ்வுகளும் போரிலேயே வந்து உச்சம் கொள்கின்றன. போரை அறிவதனூடாகவே அதன் முந்தைய நிகழ்வுகளனைத்தையும் நாம் அறியமுடியும். கார்கடல் மகாபாரத நிகழ்வுகள் அனைத்திலும் புதிய பார்வைகளை அளிக்கும் கதைப்பரப்பு. கார்கடல் – வெண்முரசு நாவல் வரிசையில் இருபதாவது நாவல். இதில் வண்ணப் புகைப்படங்கள் கிடையாது
கார்கடல் / kaarkadal
Author: by ஜெயமோகன் [Jeyamohan]
Categories: Novel | நாவல் , சரித்திர நாவல்கள் | Historical Novels , Hindu | இந்து மதம்
Format: Hard Bound
Pages: 1290 pages
Language: Tamil
Publisher: கிழக்கு பதிப்பகம்