ரகுநாதன் என்னும் இளைஞனின் வாழ்வில் ஓரிரு நாட்களில் நடக்கும் சில நிகழ்வுகள் ‘ஆகாயத் தாமரை’யாக விரிகின்றன. இயல்பான சில நிகழ்வுகளும் வியப்புக்குரிய தற்செயல் நிகழ்வுகள் பலவும் இணைந்து ரகுநாதனின் வாழ்க்கையை அலைக்கழிக்கின்றன. ரகுநாதனின் வாழ்வின் ஓரிரு நாட்கள் அவனுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் போக்கைத் தீர்மானிப்பதுடன், மொத்த வாழ்க்கையின் வகைமாதிரியாகவும் இருக்கின்றன. அவனைப் போன்ற நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரின் அன்றாடங்களின் வகைமாதிரியாகவும் அவர்களது வாழ்க்கைப் போக்கினை உணர்த்தும் குறியீடாகவும் இருக்கின்றன.
புறக் காட்சிகள், மன உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றின் நுணுக்கமான சித்தரிப்புகளினூடே அசோகமித்திரன், ரகுநாதனின் கதையைச் சொல்கிறார். அவனுடைய செயல்களை, உணர்வுகளை, அவனைப் பாதிக்கும் நிகழ்வுகளை, மனிதர்களை, அவன் சிக்கிக்கொள்ளும் நெருக்கடிகளின் தன்மைகளை, அவனுக்குக் கிடைக்கும் எதிர்பாராத உதவிகளை, அவற்றை அவன் எதிர்கொள்ளும் விதங்களை நுணுக்கமாகச் சித்தரிக்கிறார். இந்தச் சித்தரிப்புகளில் குடும்ப உறவுகள், சமூக உறவுகள், பொருளாதாரப் படிநிலைகள், ஆண் – பெண் உறவுகள், அலுவலக நடைமுறைகள் எனப் பல அம்சங்கள் துலங்குகின்றன.
படித்துக்கொண்டிருக்கும்போது தாளும் எழுத்துக்களும் மறைந்து புனைவின் காட்சிகள் மனத் திரையில் புலனாக, காதருகே ஒரு குரல் மிருதுவாகப் பேசுவதுபோன்ற உணர்வைத் தரும் அசோகமித்திரனின் சித்தரிப்பு ரசவாதம் இந்த நாவலிலும் கச்சிதமாக அமைந்துள்ளது.
ஆகாயத் தாமரை என்னும் கற்பனையை மானுடக் கனவுகளின் குறியீடாக உருவகிக்கும் இந்த நாவல், இந்தக் குறியீட்டின் பின்புலத்தில் வாழ்வின் யதார்த்தத்தைக் காட்டுகிறது.- அரவிந்தன்
ஆகாயத்தாமரை (Aagaaayathaamarai)
Author: அசோகமித்திரன் (Asokamithran)
Publisher: காலச்சுவடு
Language: தமிழ்
ISBN: 8183681328
Published on: 2019
Book Format: Paperback
Category: நாவல்