நெருக்கடி நிலைக் காலகட்டத்தின் பின்புலத்தில் எழுதப்பட்ட தனித்தனிச் சித்திரங்களின் தொகுப்பு இந்த நாவல். இந்தச் சித்திரங்களின் பொதுவான பின்புலம் நெருக்கடி நிலைக் காலகட்டமாக இருந்தாலும் நாவல் அதைத் தாண்டியும் பயணிக்கிறது. சமகாலத்து நிகழ்வுகளுக்கான மனிதர்களின் எதிர்வினைகளை நுட்பமாகப் பதிவுசெய்யும் இந்த நாவல், வாழ்வின் அடிப்படையான அம்சங்கள் குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. லட்சிய வேகம், அர்ப்பணிப்பு மிகுந்த செயலூக்கம், தத்துவத் தேடல் ஆகியவற்றின் பொருள் என்ன என்னும் கேள்வியை அழுத்தமாக எழுப்பித் தன் போக்கில் விடையையும் தருகிறது. வாழ்வனுபவங்கள், கருத்து நிலைப்பாடுகள், தத்துவ விசாரங்கள், லட்சிய உணர்வு கொண்ட செயல்பாடுகள் ஆகியவற்றின் சித்திரங்களாக உருக்கொள்ளும் இந்த நாவல் பல்வேறு சிறுகதைகளின் தொகுப்பு என்னும் மயக்கத்தைத் தரக்கூடியது. இந்தச் சித்திரங்களின் அடிச்சரடைக் கண்டடையும் வாசகர் நாவலுக்குரிய தரிசனத்தையும் அதில் அடையாளம் காண முடியும். தமிழ் நாவல் வடிவத்தில் பெரும் உடைப்பை ஏற்படுத்திய வெற்றிகரமான பரிசோதனைகளில் ஒன்று என இந்நாவலைத் தயங்காமல் சொல்லலாம். வடிவ ரீதியில் மட்டுமல்லாமல், பேசப்படும் பொருள் சார்ந்தும் தன் முக்கியத்துவத்தைக் கால ஓட்டத்தில் சற்றும் இழக்காத நாவல் இது. எழுதப்பட்ட காலத்தின் சமகாலம் என்பது, வாசிக்கப்படும் காலத்தின் சமகாலமாகவும் தோற்றம் கொள்ளக்கூடிய ரஸவாதம் அசோகமித்திரனின் கலையால் சாத்தியமாகியிருக்கிறது.
இன்று (காலச்சுவடு) / Indru
Author: அசோகமித்திரன் (Asokamithran)
Publisher: காலச்சுவடு
Language: தமிழ்
ISBN: 9789388631013
Published on: 2019
Book Format: Paperback
Category: நாவல்